அஸ்ஸாம் மாநிலத்தில் முதல்கட்ட நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-வது கட்ட நடவடிக்கையில் 800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மாக கூறியிருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் முதல்கட்ட நடவடிக்கை தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் 2-வது கட்ட நடவடிக்கையில் மாநில காவல்துறையினர் ஈடுபட்டனர். இதில், 800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் பக்கத்தில் “குழந்தைத் திருமணத்திற்கு எதிரான ஒடுக்குமுறையில் மாநில அரசு களமிறங்கி இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற முதல்கட்ட நடவடிக்கையின்போது, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் 2-வது கட்ட சிறப்பு நடவடிக்கையில் மாநில காவல்துறை ஈடுபட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 800-க்கும் மேற்பட்ட நபர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.
இந்த நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதால், கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்குகளில் மொத்தம் 3,907 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3,319 பேர் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012-ன் (போக்ஸோ) கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.