ரூபாய் 3,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், கைதானவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள சிண்டிகேட் வங்கியில் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனை நடந்து வருவதாகத் தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 2016-ஆம் ஆண்டு, சிண்டிகேட் வங்கியின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி ஆர்.கே. அல்ரேஜா, மத்திய விஜிலென்ஸ் கமிஷனில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரையிலான காலகட்டத்தில், போலி நிறுவனங்கள் பெயரில் நடப்பு கணக்கு தொடங்கி, பல நாடுகளிலிருந்து, ரூபாய் 3,500 கோடி வரை, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்த முகமது பெரோஸ், ஹாரூன் ரஷீத், லியாகத் அலி ஆகியோருக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஹாரூன் ரஷீத்துக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 6 இலட்சம் அபராதமும் விதித்து, கடந்தாண்டு பிப்ரவரி16-ல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், மற்றொருவரான லியாகத் அலி மீதான வழக்கு, சிபிஐ 12-வது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி டி.மலர்வாலண்டினா முன்பாக நடந்தது.
இதைத்தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, குற்றவாளிக்குச் சட்ட விரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின்படி, நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 3 இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.