காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளியை முன்னிட்டு, சென்னை காதி பவனில் தள்ளுபடி விற்பனையை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில், 155வது காந்தி ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் ஆடைகள் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர், ஹரிஜன் சேவா சங்கத்தின் சர்வோதயா விடுதி மாணவியருக்கு இலவச கதர் ஆடைகளை வழங்கினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திய சிந்தனை என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக கைத்தறி, கதர் துறை செயலர் தர்மேந்திர பிரதாப், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் சுரேஷ், சென்னை காதி கிராமோத்யோக் பவன் தலைவர் சுந்தர், செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
காந்தி ஜெயந்தி, தீபாவளி கதர் விற்பனைக்காக, சென்னை அண்ணா சாலை பவனில் தமிழக கதர் ரகங்களுக்கு, 30 சதவீதம் வரையும், வெளிமாநில ரகங்களுக்கு, 20 சதவீதம் வரையும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.