நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் உயிரிழந்தது குறித்து, தேசிய புலிகள் ஆணைய விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளால், தமிழக வனத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், சிகூர் வனப்பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 புலிக்குட்டிகள் இறந்தன. மேலும், நடுவட்டம் பகுதியில் ஒரு பெண் புலியும், கார்குடி பகுதியில் ஒரு ஆண் புலியும் உயிரிழந்தன. கடந்த செப்டம்பரில் நஞ்சநாடு பகுதியில் 2 ஆண் புலி, சின்ன குன்னூரில் ஒரு ஆண் புலிக்குட்டி மற்றும் 3 பெண் புலிக்குட்டிகள் என கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் செப்டம்பர் 19-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், மொத்தம் 10 புலிகள் உயிரிழந்துள்ளன.
இதுகுறித்து, தேசிய புலிகள் ஆணையம், வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய வன உயிரின நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள், தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவை, புலிகள் இறந்த இடங்களில் தடயங்கள் சேகரிப்பில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா?. இறந்த புலிக்குட்டிகளின் பிரேதப் பரிசோதனையில், தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்பட்டதா?.
குட்டிகள் இறந்த இடங்களில் தாய் புலிகள் வந்து சென்றதற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டதா, அங்குள்ள கேமராக்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் எங்கே?. தாய் புலிகள் என்ன ஆனது என்பது குறித்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?. அவலாஞ்சி அருகே விஷம் வைத்து புலி கொல்லப்பட்ட வழக்கில், விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனரா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் விசாரணையில் கேட்கப்பட்டன. இதற்கு சரியான பதிலளிக்க முடியாமல், தமிழக வனத்துறை அதிகாரிகள் திணறி உள்ளனர்.