கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று 12 -ம் வகுப்பு மாணவன் ஜீவா, ஆனந்த் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார் ஜீவா என்ற மாணவன். இவரது சகோதரியை ஆனந்த் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதற்கு ஜீவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு நாட்களாக தனது சகோதரியின் செல்போனை, ஜீவா வாங்கி வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று 12 -ம் வகுப்பு மாணவன் ஜீவாவை, ஆனந்த் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஜீவாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தனது சகோதரி ஆனந்த்தைக் காதலிப்பது ஜீவாவிற்குப் பிடிக்கவில்லை என்றும், கடந்த 6 மாதத்திற்கு முன்பு, ஜீவாவை ஆனந்த் தவறான உறவுக்கு அழைத்ததாகவும், இது குறித்து ஆனந்த்தின் குடும்பத்தாரிடம் ஜீவா கூறியதும் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
பட்டப்பகலில், பள்ளி மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது என பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.