தெலங்கானாவில் சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், நிஜாமாபாத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை சத்தீஸ்கர் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிற்பகலில் தெலங்கானா மாநிலத்துக்குச் சென்றார். இம்மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. இம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் அரசை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதையடுத்து, கடந்த 1-ம் தேதி தெலங்கானா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இன்று மீண்டும் தெலங்கானா மாநிலத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். மேலும், என்.டி.பி.சி.யின் தெலங்கானா சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தின் 800 மெகாவாட் திறன்கொண்ட முதல் அலகையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஒரு மாநிலத்தில் போதுமான அளவு மின்சாரம் இருந்தால்தான், தொழில் செய்வதற்கும், வாழ்வதற்கும் எளிதாக இருக்கும். இன்று என்.டி.பி.சி.யின் தெலங்கானா சூப்பர் பவர் அனல் மின் திட்டத்தின் முதல் அலகு திறந்து வைக்கப்படுகிறது. விரைவில் இரண்டாவது அலகும் (யூனிட்) தொடங்கப்படும். இதன் பிறகு, இத்திட்டத்தின் திறன் 4,000 மெகாவாட்டை எட்டும்.
இந்த தெர்மல் பிளான்ட் நாட்டிலுள்ள இதர தெர்மல் பிளான்ட்களை விட மிகவும் மேம்பட்டுத்தப்பட்டது. எங்களால் தொடங்கப்பட்ட திட்டத்தை, எங்களது அரசாங்கமே நிறைவு செய்து திறந்து வைக்கிறது. இத்திட்டத்திற்கு 2016-ம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். இன்று அத்திட்டத்தைத் திறந்து வைக்கிறேன். இது எங்கள் அரசாங்கத்தின் பணி மற்றும் கலாச்சாரமாகும்” என்றார்.
மேலும், தெலங்கானாவை உயர்த்தும் வகையில், இரயில் உள்கட்டமைப்பு, தர்மாபாத் – மனோஹராபாத் மற்றும் மகபூப்நகர் – கர்னூல் இடையேயான மின்மயமாக்கல் திட்டம், மனோஹராபாத் மற்றும் சித்திப்பேட்டையை இணைக்கும் புதிய இரயில் பாதை உள்ளிட்ட இரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுதவிர, சித்திப்பேட்டை – செகந்திராபாத் – சித்திப்பேட்டை இரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.