தெலங்கானாவில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்பியதாகவும், ஆனால், தான் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
கடந்த 1-ம் தேதி தெலங்கானா மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இன்று மீண்டும் தெலங்கானா சென்ற பிரதமர் மோடி, 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தின் முதல் அலகையும் திறந்து வைத்தார். அப்போது, 2016-ம் ஆண்டு தான் அடிக்கல் நாட்டிய திட்டத்தை தற்போது தானே திறந்து வைப்பதாக பெருமிதம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் நிஜாமாபாத் நகரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இதுவரை கூறாத ரகசியத்தைக் கூறப்போகிறேன்” என்று சஸ்பென்ஸ் வைத்தபடியே பேச்சைத் தொடங்கினார். “ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றிபெற்றதும், மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு பா.ஜ.கவின் ஆதரவு தேவைப்பட்டது. இத்தேர்தலுக்கு முன்பு விமான நிலையத்தில் என்னை வரவேற்றார். ஆனால், அதன் பிறகு திடீரென நிறுத்தி விட்டார்.
டெல்லியில் என்னைச் சந்திக்க வந்த கே.சி.ஆர்., உங்கள் தலைமையில் நாடு முன்னேறி வருகிறது என்று சொல்லத் தொடங்கினார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகவும் கூறியவர், அவருக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது மோசமான ஆட்சி மற்றும் அரசியல் செயல்பாடுகளால், அவருடன் பழக முடியாது என்று நான் கே.சி.ஆரிடம் கூறிவிட்டேன். மேலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் அவரை சேர்க்கவும் மறுத்து விட்டேன். காரணம், தெலங்கானா மக்களை பா.ஜ.க.வால் ஏமாற்ற முடியாது.
அதோடு, 2020 டிசம்பரில் ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. வென்ற 48 இடங்கள் தெலங்கானாவின் தலைவிதியை மாற்றுவதற்கான செயல்முறையின் தொடக்கமாகும். இதன் பிறகும், கே.சந்திரசேகர் ராவ் மீண்டும் என்னை அணுகி, தனது மகன் கே.டி.ராமராவிடம் (கே.டி.ஆர்.) அனைத்து “கரோபார்”களையும் ஒப்படைக்கப் போவதாகவும், என்னுடைய ஆசிர்வாதத்தைக் கோருவதாகவும் கூறினார்.
ஆனால் நான், இது ஜனநாயகம் என்றும், அவரது வாரிசை தெலங்கானா மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் கே.சி.ஆரிடம் கூறிவிட்டேன். கே.சி.ஆர். ஒன்றும் முடிவெடுக்கும் அரசன் கிடையாது. இதன் காரணமாக, கே.சி.ஆர். எனது நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். அதேசமயம், நான் சொல்வது என்னவென்றால், ஊழல் பெருச்சாலிகளால் எனது அருகில் உட்கார முடியாது என்பதுதான். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பி.ஆர்.எஸ். அரசின் ஊழலை அம்பலப்படுத்துவோம்” என்று கூறினார்.