கன்னியாகுமரியில் இடையிடையே பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி மலையோரப் பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக விடிய விடிய மழை நீடித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பூதப்பாண்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்குத் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
குலசேகரம் அருகே மோதிரமலை குட்டியாறு இணைப்பு தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மூன்றாவது நாளாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குளச்சலில் சூறைக்காற்று வீசி வருவதால், 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால், 72 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம், ஒரே நாளில் 9 அடி உயர்ந்து, 52.60 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும், 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 27.97 அடியாக உயர்ந்துள்ளது.