பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சில கருப்பொருள்கள் மற்றும் அவற்றின் சமூக தாக்கத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆய்வைப் பகிர்ந்து கொண்டார்.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐஐஎம் பெங்களூரு இணைந்து நடத்திய இந்த ஆய்வில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 105 அத்தியாயங்களின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்
மனதின் குரல் நிகழ்ச்சி இன்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ஸ்டேட் ஆப் இந்தியா மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகம் ஆகியவற்றின் சுவாரஸ்யமான ஆய்வு தொகுக்கப்பட்டுள்ளது.
இது உள்ளடக்கப்பட்ட சில கருப்பொருள்கள் மற்றும் அவற்றின் சமூக தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஊடகத்தின் மூலம் பல வாழ்க்கைப் பயணங்களையும், கூட்டு முயற்சிகளையும் நாம் எவ்வாறு கொண்டாடினோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சி என்ற சக்திவாய்ந்த மற்றும் திறன்வாய்ந்த தகவல் தொடர்பு ஊடகத்தால் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் நீடித்த தாக்கத்தை இந்த கூட்டு ஆராய்ச்சி மதிப்பீடு செய்துள்ளது. இயற்கை மொழி செயலாக்கத்தை (Natural Language Processing) பயன்படுத்தி மனதின் குரல் நிகழ்ச்சி கொள்கை உட்பொருளை பகுப்பாய்வு செய்வதிலும் இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.
“Beti Bachao Beti Padhao” திட்டம், அதாவது மகளை காப்பாற்றுங்கள், மகளுக்கு கல்வி கொடுங்கள் என்று பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு எதிராக இந்திய அரசால் துவங்கப்பட்ட ஒரு சட்டம். கடந்த 2015ம் இந்த திட்டம் துவங்கப்பட்ட நிலையில், மனதின் குரல் மூலம் இந்த திட்டம் இன்னும் அதிகமான நபர்களை சென்றடைந்தது என்று ஆய்வு கூறுகின்றது.
“Beti Bachao Beti Padhao” திட்டத்தின் இன்னொரு முன்னெடுப்பு தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), (செல்வமகள் திட்டம்) இதுவும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கும் பொருட்டு இந்திய அரசால் துவங்கப்பட்ட சிறிய சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டமும் மனதின் குரல் நிகழ்வு மூலம் பெரிய அளவில் பிரபல்யம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக்தில் சுகன்யா சம்ரிதி யோஜனா மூலம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
காலங்காலமாக நம் இந்திய மண்ணில் இருந்து வரும் ஒரு விஷயம் தான் யோகா, ஆனால் கடந்த 2015ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த மன் கி பாத் நிகழ்வில் யோகா குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டது. யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பல விஷயங்கள் மனதின் குரல் நிகழ்வில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன் விளைவாக உலக அளவில், குறிப்பாக யோகா குறித்த கூகுள் தேடல் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது.
நமது சுதந்திரப் போராட்டத்தின் போது காதி பெரும் புகழ் பெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மாறிவரும் காலப்போக்கில் அது அதன் பிரபலத்தை இழந்து வருகிறது என்றே கூறலாம். ஆனால் மன் கி பாத் மூலம், காதி அபரிமிதமான பிரபலத்தை கடந்த சில ஆண்டுகளில் பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல. அதே நேரத்தில் விற்பனையும் அதிகரித்தது, காதியின் சமூக ஊடக கவரேஜும் அதிகரித்துள்ளது.
முத்ரா லோன் விண்ணப்பத் தேடல் நவம்பர் 15 முதல், அதாவது மன் கி பாத்க்குப் பிறகு கூகுள் தேடல்களில் பெரிய முன்னேற்றத்தை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அதன் தொடக்கத்தில் இருந்து ₹2.02 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிறுதானியங்கள் குறித்து கூகிளில் மிகக் குறைவான தேடல்களே இருந்தது. மேலும் மனதின் குரல் மூலம் அவை கூடுதல் ஈர்ப்பைப் பெற்றன, முந்தைய சராசரி 0.026லிருந்து 55.77 ஆக அது அதிகரித்தது.
நாட்டிலுள்ள பாரம்பரிய கலங்கரை விளக்கங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் 65 கலங்கரை விளக்கங்கள் உள்ளன, அவற்றை சுற்றுலா தளங்களாக உருவாக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.