தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நந்தனார் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆதிதிராவிடர்களுக்குப் பூணூல் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தொழில் அதிபர் ஸோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது என்றும், அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவது இல்லை என்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது என்றும், பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற பெண், பட்டியலினத்தவர் என்பதால் பதவியேற்க முடியவில்லை. இது நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.