புகழ் பெற்ற பழனிமலையில், சுவாமி தரிசனம் செய்வது தொடர்பாகத் திருக்கோவில் ஊழியர்களுக்கும், பக்தர் ஒருவருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் திருக்கோவில் மூன்றாவது படை வீடாகப் போற்றப்படுகிறது. இந்தக் கோவில் சுமார் இரண்டு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும்.
இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்த தலத்தின் மூலவரைப் பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவராக முத்துகுமாரசாமி அருள் பாலித்து வருகிறார்.
இப்படி சிறப்பு வாய்ந்த பழனி முருகன் மலைக்கோவில், தரை மட்டத்திலிருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டும். பழனிக்கு ஆவினன்குடி, தென்பொதிகை என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.
இந்த திருக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த திருக்கோவில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும்.
இந்த நிலையில், கிருத்திகை தினத்தையொட்டி, இரவு 9 மணிக்கு மேல் தனது குடும்பத்தினருடன் வந்த திருப்பூரைச் சேர்ந்த பக்தர், சுவாமி தரிசனம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், இரவு 9 மணிக்குமேல் மலைமேல் செல்ல அனுமதி இல்லை. மேலும், இரவு 9 மணிக்கு திருக்கோவில் நடைசாத்தப்படும் எனக் கோவில்ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால், தாக்குதல் நடத்திய பக்தரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க திருக்கோவில் ஊழியர்கள் முயன்றுள்ளனர். இதனால், மோதல் மேலும் வலுவடைந்துள்ளது.
இது தொடர்பாகத் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கோவில் ஊழியர்கள் மற்றும் மோதலில் ஈடுபட்ட பக்தரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.