குன்னூர் அருகே உள்ள முத்தநாடு எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த கரடிகள், அங்கிருந்த ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகள் உணவு தேடிக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது வழக்கமாகி விட்டது. குறிப்பாக, கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. வன விலங்குகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பல்வேறு பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு சென்று விடுகின்றன.
குன்னூர் அருகே முத்தநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வந்த கரடிகள், ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து, உள்ளே நுழைந்தன. பின்னர், அங்கிருந்த உணவுப் பொருட்களைத் தின்று சூறையாடி விட்டுச் சென்றன. நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதை அடுத்து அப்பகுதி மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மீண்டும் கரடி வந்தால் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், கதவுகளில் பாதுகாப்பை ஏற்படுத்த, இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், கரடிகளுக்குப் பிடித்த உணவுகளான எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பாதுகாப்பான அறைகளில் வைக்கவும் கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர்.