சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மகன், மகள் உள்ளிட்டோருக்குத் திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி அடுத்துள்ள வேலக்குறிச்சியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன், இவர், மருங்காபுரி திமுக ஒன்றியச் செயலாளராக 7 முறை பதவி வகித்தார். மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பதவி வகித்தார்.
கடந்த 1996 -ம் ஆண்டு மருங்காபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, திமுக அமைச்சரவையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர், 2013 -ம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர், 2021 -ல் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
கொரோனா நேரத்தில், தொற்றால் பாதிக்கப்பட்ட செங்குட்டுவன், மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், கடந்த 1996 -ம் ஆண்டு முதல் 2001 -ம் ஆண்டு வரை கால்நடைத் துறை அமைச்சராக இருந்த செங்குட்டுவன், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செங்குட்டுவனின் மகன்கள், மகள் உட்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதாவது, செங்குட்டுவனின் மகன்கள் பன்னீர்செல்வம் மற்றும் சக்திவேல், மகள் மீனாட்சி, அதேபோல, செங்குட்டுவனின் சகோதரர் மகள் வள்ளி ஆகிய 4 பேருக்கும் திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் இறந்துவிட்டதால், மற்றவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.