மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு உட்பட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவு “ஸ்நேக சம்வாத்” திட்டத்தின் ஒரு பகுதியாக “நன்றி மோடி ஜி” பிரச்சாரத்தை நடத்த முடிவு செய்திருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அந்த வகையில், முத்தலாக் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து இஸ்லாமியப் பெண்களுக்கு விடுதலை கொடுத்தார். பெண்களும் ஹஜ் பயணம் மேற்கொள்ள உரிமை பெற்றுத் தந்தார். அதேபோல, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
இதன் காரணமாக, சந்திரயான்-3 விண்கலத்தில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றது. மேலும், நாரி சக்தி புரஸ்கார் விருதும் சாதனை பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் அதிகாரம் அளிக்கும் வகையில், நாரி சக்தி வந்தன் அதினியம் என்கிற பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்து, நிறைவேற்றியும் காட்டினார்.
இந்த நிலையில்தான், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், “நன்றி மோடி ஜி” என்கிற பிரசாரத்தை முன்னெடுக்க, பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவு முடிவு செய்திருக்கிறது. இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதங்களை அனுப்புவார்கள்.
இப்பிரசாரத்தை இந்த மாதத்திலேயே தொடங்க பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவு திட்டமிட்டிருக்கிறது. எனினும், பிரசாரம் குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்பிரசாரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் தொடங்கி, சட்டமன்றத் தொகுதிகள் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மோடி மித்ரா சம்மேளன்’ எனும் இப்பிரசாரம் சமூகத்தின் தொடர்புகளை எளிதாக்கும் வகையில் இருக்கும்.
இது தவிர, பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவு பொதுமக்களுடனான வலுவான உறவுகளை வளர்க்க கூடுதலாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, அரசியல் சாராதவர்களையும், கட்சியின் சித்தாந்தத்துடன் ஏதோ ஒரு வகையில் இணைந்திருப்பவர்களையும் பிரதமர் மோடியுடன் இணைக்க ‘மோடி மித்ரா’ என்கிற திட்டத்தையும் நடத்த திட்டமிட்டிருக்கிறது.
இதற்காக, மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களுடன் கூடிய ஒரு பிரத்யேகக் குழுவை நிறுவி இருக்கிறது. இக்குழுவில் மதப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இடம்பெறுவார்கள். இவர்கள் சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதிலும், பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு ஆதரவைப் பெறுவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள். அதேபோல, பொதுமக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் இணையதளம் ஒன்றையும் பா.ஜ.க. தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.