வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்திற்கு சுமார் 45 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் வட பகுதியில் கடந்த 3-ம் தேதி இரவு மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளப் பெருக்கால் சிக்கிம் மாநிலத்தில் 22,034 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 2,011 பேர் மீட்கப்பட்டதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
திடீர் வெள்ளத்தில் ராணுவ முகாமும் சேதமடைந்ததால், அங்கிருந்த 22 வீரர்கள் உட்பட 102 பேரை காணவில்லை. இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 4 மாவட்டங்களில் 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிங்தாம் பகுதியை சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமுக்கு சுமார் 45 கோடி ரூபாய் பேரிடர் உதவியை வழங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகையானது 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பாகும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில அரசுக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய, மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுவையும் அமைத்துள்ளது.
இந்த குழு விரைவில் மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் என்றும், அதன் மதிப்பீட்டின் அடிப்படையில் சிக்கிமுக்கு மேலும் கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தின் நிலைமையை மத்திய அரசு 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகங்களின் தொழில்நுட்ப குழுக்கள் மாநிலத்தில் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளை மீட்டெடுத்து வருகின்றனர்.