இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை (ஜே.கே.டி.எஃப்.பி) மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சி (J.K.D.F.P.), 1998-ஆம் ஆண்டு முதல் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இக்கட்சியின் உறுப்பினர்கள் இந்தியாவில் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறார்கள். மேலும், மக்களைத் தூண்டிவிட்டு இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, காஷ்மீரை தனி இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகிறார்கள்.
இந்த கட்சிக்கு எதிராக (UAPA 1967, IPC 1860, The Arms Act 1959 மற்றும் Ranbir Penal Code 1932) பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை நிறுவிய ஷாபிர் அகமது ஷா, பண மோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்குகளில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இவர், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபடும் முக்கிய பிரிவினைவாதி.
மேலும், இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு தாக்குதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தவிர, இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஜே.கே.டி.எஃப்.பி.க்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற அரசியலமைப்பு அதிகாரத்துக்கு எதிராகவும், மாநிலத்தின் இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த அமைப்புக்கு எதிராக உடனடி மற்றும் விரைவான நடவடிக்கை தேவை என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. மேலும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் தேசவிரோத நடவடிக்கைகளைக் அந்த அமைப்பு தொடரும் என்றும் சுட்டிக் காட்டியது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை சட்ட விரோத சங்கமாக மத்திய அரசு அறிவித்து, அக்கட்சிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது.