உக்ரைனில் வணிக வளாகத்தின் மீது இரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த இரஷ்யா, 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரினால் இரு நாடுகளும் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. போரில் உக்ரைனின் பல நகரங்களை இரஷ்யா கைப்பற்றியது.
தொடர்ந்து நடந்து வரும் இரஷ்யா-உக்ரைன் போரால், ஒட்டுமொத்த உலகமும் கடும் பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இந்த நிலையில், நேற்று உக்ரைனின் கிழக்கே கார்கிவ் மாகாணம், ஓலெக் சினிகபோ என்ற இடத்தில் மளிகை சாமான்கள் விற்பனை செய்யும் வணிக வளாக கட்டடத்தின் மீது இரஷ்யா ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், சேதமடைந்த கட்டடங்களின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.