திமுக அரசு அறிமுகம் செய்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், இதுவரை விண்ணப்பம் செய்தும் பணம் கிடைக்காத 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாளையொட்டி மகளிர் உரிமை தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 15 -ம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மகளிர் உரிமை தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 21-ம் ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.
தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது வரை 7 லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இது தொடர்பாகப் பேசிய பெண்கள் சிலர், முதலில் பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்றுதான் தேர்தல் நேரத்தில் திமுகவினர் பிரச்சாரம் செய்தனர். அதை நம்பி நாங்களும் ஓட்டு போட்டோம்.
ஆனால், ஆட்சிக்கு வந்த இரண்டரை வருடங்களுக்குப் பின்பு தற்போதுதான் அந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.
அதுவும் கூட விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், பெண்கள் வாக்குகளைக் குறிவைத்து ஆயிரம் வழங்குகிறார்கள். முதலிலேயே தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் ஏன் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு, இப்போது ஏமாற்றுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே, திமுகவுக்கு வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம் எனத் தெரிவித்தனர்.