இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் நாகை மாவட்டம் கோடியக்கரை வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகு, நாட்டுப் படகுகளில் மீனவர்கள் பாக் ஜல சந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
தமிழக கடலோரம் முதல் இலங்கை வரை குறுகிய பகுதியாக உள்ளதால் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்கும் நிலை உள்ளது. இதனால் இலங்கை கடற்படை தாக்குதல், கைது, படகுகள் மூழ்கடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடலில் இந்தியக் கடலோர காவல் படை வீரர்கள், தமிழக மரைன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கீழக்கரை, வாலி நோக்கம், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், தொண்டி, நம்பு தாளைப் பகுதிகளிலிருந்து கஞ்சா, பீடி இலை, பிரவுன் சுகர் போன்றவற்றைப் படகில் இலங்கைக்குக் கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. பதிலுக்கு அங்கிருந்து தங்கக் கட்டிகள் மற்றும் பணம் தமிழகத்திற்குத் திரும்பி வருகிறது.
இது வெறும் கடத்தல் சம்பவமாக மட்டுமே கருத முடியாது. காரணம், கடத்தல்காரர்களுடன், சமூக விரோத கும்பலும் ஊடுருவதுதான் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விசயம். ரோந்து பணி சுணக்கத்தால் இக்கடல் பகுதி கடத்தல்காரர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது.
உதாரணத்திற்கு, கடந்த ஓராண்டில் இலங்கையிலிருந்து 500 -க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தனுஷ்கோடி மணல் தீட்டை, அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கி உள்ளனர். இவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக வசூலித்துக் கொள்கின்றனர் இலங்கை படகோட்டிகள்.
இலங்கையிலிருந்து, தனுஷ்கோடிக்கு வந்து துணிச்சலுடன் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்குப் பத்திரமாகத் திரும்பிவிடுகின்றனர் கடத்தல்காரர்கள்.
இது தொடர்ந்தால், அன்று மும்பையைப் போல், இன்றும் பயங்கரவாதிகள் எளிதில் இந்தியாவிற்குள் ஊடுருவிவிடுவார்கள் என்றும், எனவே, கடல் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை என மாநில அரசுக்கு உளவுத்துறையினர் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?