இந்தியாவின் அதிரடியைத் தொடர்ந்து, தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா அரசு, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தங்கவைத்திருக்கிறது.
காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்வாரா முன்பு கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் இந்திய தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் தீவிரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், ஹரிதீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
இதற்கு இந்தியா மறுப்பும், கண்டனமும் தெரிவித்த நிலையிலும், அந்நாட்டுக்கான இந்திய தூதரை வெளியேறுமாறு ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதையடுத்து, இந்தியாவும் பதிலடி நடவடிக்கையாக கனடா நாட்டின் உயர் தூதரக அதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. மேலும், கனடாவிலுள்ள இந்திய தூதரகம் அந்நாட்டினருக்கு இந்திய விசா வழங்கும் பணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டின் தூதர்களை திரும்பப் பெறுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, கனடா அரசாங்கம் இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதர்களை திரும்பப் பெற்றிருக்கிறது. இவர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கனடா நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட கனடா நாட்டின் தூதர்கள், சிங்கப்பூர் மற்றும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறது.