தமிழகத்தில் பஜ்ரங்தள் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “தேசம் காப்போம் தெய்வீகம் காப்போம் என்று இந்து பஜ்ரங்தள் யாத்திரை செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை பாரதம் முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்த யாத்திரை பிற மாநிலங்களில் இந்துக்களின் ஆதரவுடன் மிகச் சிறப்பாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்து விரோத தி.மு.க. அரசு வேண்டுமென்றே விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60-வது ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக் கூட்டங்கள், இளைஞர்கள் யாத்திரையை நடத்தத் தடை விதித்திருக்கிறது.
கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரியில் பாரத மாதா பூஜையுடன் தமிழகத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் இணைந்து தேசபக்தி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தவிருந்தனர். ஆனால், அவர்களை பாரத மாதா பூஜை செய்யாமல் தடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், மீண்டும் அதே இடத்தில் பாரத மாதா பூஜை செய்ய வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் உணவு உண்ணாமல் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், இரவு விடுவிக்கப்பட்டு அதே இடத்தில் பாரத மாத பூஜை நடைபெற்றது.
மேலும், அதேநாளில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், அகில பாரத இணைச் செயலாளர் ஸ்தானுமாலயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அக்டோபர் 1-ம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் 60-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதேசமயம், அக்டோபர் 3-ம் தேதி தேதி விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாகச் சிவகாசி சென்றபோது, அங்கிருந்த காவல்துறை நோட்டீஸ் விநியோகம் செய்யக்கூட அனுமதிக்கவில்லை.
அதேபோல, அக்டோபர் 4-ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்து விட்டனர். ஆனால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அன்றையதினம் மாலை உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை முன்பு இந்து விரோத தி.மு.க. அரசின் இச்செயலை கண்டித்து மனமுருகி வேண்டி முறையிட்டனர். இதில், கலந்து கொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இது தவிர, அக்டோபர் 6-ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கப்புணரி பகுதியில் நடைபெறவிருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி இல்லை என்கிற உத்தரவை காவல்துறை பிறப்பித்திருந்தது. அதேபோல, அக்டோபர் 8-ம் தேதியான நாளை திருச்சியில் நடைபெறவுள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் 60-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்துக்கும் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. இதனால், இது தமிழகமா அல்லது தாலிபான் நாடா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் நிர்வாகிகள் கேள்வி எழுப்பி இருப்பதோடு, கடும் கண்டனமும் தெரிவித்திருக்கின்றனர்.