இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயுள்ள சர்ச்சைக்குரிய காஸா பகுதியில் இருந்து, இன்று அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் 5,000 ஏவுகணைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவி இருக்கின்றனர். இதில், மேயர் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதையடுத்து, இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக அறிவித்திருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே தன்னாட்சி பெற்ற காஸா பகுதி அமைந்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதேபோல, மேற்குக்கரைப் பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு நிர்வகித்து வருகிறது. அதேசமயம், மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஹமாஸ் அமைப்பைப் போலவே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட சில ஆயுதக்குழுக்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. காரணம், இந்த அமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், ஹாமஸ் அமைப்புக்குத் தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. அதேபோல, காஸாவைக் கைப்பற்ற இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக பாலஸ்தீனம் குற்றச்சாட்டி இருக்கிறது. இதனால், இரு நாடுகளும் தாக்குதல் நடத்திக் கொள்வது தொடர்கதையாக இருக்கிறது.
இந்த நிலையில்தான், காஸா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட தீவிரவாதிகள் இன்று காலை முதல் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றன. காஸா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டிருக்கின்றன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடத்தி வருகின்றனர். “அல் அக்சா பிளோட்” என்கிற பெயரில் இஸ்ரேல் மீது இத்தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள்.
இத்தாக்குதலில் இஸ்ரேலின் ஷார் ஹனேகேவ் நகர மேயர் ஓபிர் லீப்ஸ்டீன் உட்பட 5 இஸ்ரேலியர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. மேலும், இஸ்ரேலிய எல்லை நகரங்களில் உள்ள காவல் நிலையங்களையும் பாலஸ்தீனிய தீவிரவாதிகள் கைப்பற்றி இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அபாய ஒலிகளை ஒலிக்கச் செய்த இஸ்ரேல் அரசு, போர் நிலை சூழல் உருவாகி இருப்பதாக அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து ஐ.டி.எஃப். எனப்படும் இஸ்ரேல் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் ஏவுகணைத் தாக்குதல் நடந்திருக்கிறது. பல்வேறு வழிகளில் இருந்தும் இஸ்ரேலுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். இதனால், இஸ்ரேலின் தெற்கு மற்றும் மையப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, காஸாவை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் படைகளை தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார். ஏற்கெனவே, உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலக நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் சூழலில், இஸ்ரேல் மீதான இத்தாக்குதல் இஸ்ரேல் – பாலஸ்தீன போருக்கு தூபம் போடுவதுபோல் அமைந்திருக்கிறது.