பிரதமர் நரேந்திர மோடி மீதும், அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆதரவாளர்கள் மும்பை காவல்துறையினருக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய். தற்போது டெல்லி திகார் சிறையில் இருக்கும் இவர் மீது 25-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருக்கின்றன. மேலும், நாடு முழுவதும் உள்ள கேங்ஸ்டர் கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் கட்டுப்பாட்டில், 5 மாநிலங்களில் 700-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் பாடகர் மற்றும் இசைக் கலைஞரான சித்து மூஸ்வாலா கொலை வழக்கிலும் முக்கியக் குற்றவாளி இந்த லாரன்ஸ் பிஷ்னோய்தான். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் உட்பட டாப் 10 பிரபலங்களை கொல்ல இவர் சதித்திட்டம் தீட்டி இருந்தது சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கனடாவில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருக்கிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை காவல்துறைக்கு இன்று ஒரு இ-மெயிலில் வந்தது. அந்த இ மெயிலில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு 500 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லையெனில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்.
மேலும், பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மேற்கண்ட இ மெயில் மிரட்டல் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த இ மெயில் கடிதம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.