கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்தும், அதை செயல்படுத்துவது குறித்தும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் ஆற்றிய உரையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவு விலையில் கடன் வழங்குவதை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார். அதேபோல, நகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய திட்டத்தை அரசு கொண்டு வருவதாகவும் பிரதமர் அறிவித்திருந்தார். மேலும், வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை உறுதி செய்வது குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமரின் உரையில், “நகரங்களில் வசிக்கும் நலிவடைந்த பிரிவினர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நடுத்தரக் குடும்பங்களுக்கு சொந்த வீடு வாங்குவது என்பது மிகப்பெரும் கனவாக இருந்து வருகிறது. ஆகவே, இதுபோன்ற நடுத்தரக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் புதிய திட்டத்தை வரும் ஆண்டுகளில் கொண்டு வருவோம். வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவர்கள் சொந்தமாக வீடு கட்ட விரும்பினால், அவர்களுக்கு வட்டி விகிதத்தில் நிவாரணம் மற்றும் பல லட்சம் ரூபாய் சேமிக்க உதவும் வங்கிகளில் கடன் வழங்குவோம்.
கொரோனா வைரஸ் காலத்தில், நாட்டை முன்னோக்கிச் செலுத்திய விதத்தில் நமது திறன்களை உலகமே கண்டது. உலகின் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்தபோது, பெரிய பொருளாதாரங்கள் மீது அழுத்தம் இருந்த நேரத்தில் கூட, உலகம் வளர்ச்சியைக் காணும் என்று நாங்கள் கூறினோம். அந்த வளர்ச்சி மனிதனை மையப்படுத்தியதாகவும், மனிதாபிமானதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைக் காண முடியும். மேலும், மனித உணர்வுகளை விட்டு நம்மால் நல்வாழ்வை வாழ முடியாது என்பதை கோவிட் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று அறித்த திட்டங்கள் நிலை குறித்தும், அத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் ஆய்வு செய்தார். அப்போது, திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் மோடி கூறுகையில், “இன்று இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாக மாறி வருகிறது. உலகப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா தனக்கென ஒரு இடத்தை சம்பாதித்திருக்கிறது. இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை உலகில் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் என்பதை நம்பிக்கையுடன் கூற முடியும். எங்கள் மனதிலோ அல்லது எனது 140 கோடி குடும்ப உறுப்பினர்களின் மனதிலோ அல்லது உலகின் மனதிலோ இனிமேல் ‘ஆனால்’ அல்லது ‘என்றால்’ என்பது இல்லை. முடியும் என்கிற முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறியிருக்கிறார்.