இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நாட்டிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளும் இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.
இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீன நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருகிறது. இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற காஸா நாட்டில் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. இதனால், இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வருகின்றன.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் இத்தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல், நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அந்நாட்டைச் சேர்ந்த மேயர் உட்பட 22 பேர் உயிரிழந்தும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தயவு செய்து எச்சரிக்கையுடன் செயல்படவும். தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும். தனியாக இருப்பதை விட பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும். உள்ளூர் நிர்வாகம் வெளியிடும்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து இஸ்ரேலிய ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் இணையதளத்தைப் பார்க்கவும் (https://www.oref.org.il/en).
அவசரத் தேவை ஏற்பட்டால், தயவுசெய்து இஸ்ரேலில் உள்ள தூதரக அதிகாரிகளான எங்களை +97235226748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மெயிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். மேலதிக வழிகாட்டுதல்களுக்கு தூதரகப் பணியாளர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.