மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற, 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு-சேவை வரி கொண்டு வரப்பட்டது. இந்த 6 ஆண்டுகளில் இதுவரை ஜிஎஸ்டி கவுன்சிலின் 51 கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 52-வது கூட்டம் டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெற்றது.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சிறுதானியங்களை ஊக்குவிக்கும் வகையில் அதன் மீதான ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படுகிறது. அதன்படி, சிறுதானியங்களால் தயாரிக்கும் மாவுகளை லூசில் விற்றால் அதன் மீது ஜி.எஸ்.டி., வரி விதிப்பு இல்லை. லேபிள் ஒட்டி பேக்கிங் செய்து சிறுதானிய மாவு விற்கப்பட்டால், 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படும்.
கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் மொலாசஸ் மீதான ஜி.எஸ்.டி., வரி 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தூய்மையான ஆல்கஹால் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களிடமே உள்ளது.
கடந்த இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில், தீர்ப்பாயங்கள் அமைப்பது குறித்து நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம். ஏற்கனவே, ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக எடுக்கப்பட்ட முடிவுகளில் சில திருத்தங்கள் செய்ய இன்று முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.