செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், வரத்து கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமானது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, 25.51 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது.
சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்வதால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், வரத்து கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்றைய கணக்கெடுப்பின்படி, வினாடிக்கு 231 கன அடிநீர் வருவதாக நீர்வளத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். ஏரியின் மொத்த உயரமான 24.0 அடியில், 3.6 டி.எம்.சி., நீர் முழு கொள்ளளவில் தேக்கி வைக்க முடியும். தற்போது, 21.9 அடிக்கு நீர் நிரம்பிய நிலையில், 3.1 டி.எம்.சி., நீர் ஏரியில் உள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி, 21 அடியை எட்டியவுடன் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.
இம்முறை, 22 அடியை எட்டியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று, காலை 10:00 மணிக்கு வினாடிக்கு 100 கன அடி உபரிநீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதனால், தாம்பரம் சுற்றிய பகுதிகள், சிறுகளத்துார், குன்றத்துார், காவனுார், திருமுடிவாக்கம், ஆதனுார், திருநீர்மலை, கவுல்பஜார், பொழிச்சலுார், அனகாபுத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிப்போர் மற்றும் அடையாற்றின் கரையோரங்களில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார்.