ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்ததாகவும், 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே இருக்கும் நகரம் காஸா. இது தன்னாட்சி பெற்ற நகரமாக இருந்தாலும், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. மேலும், இந்நகரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளைப் போல, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இத்தீவிரவாதக் குழுக்கள் அனைத்தும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், அவ்வப்போது இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், காஸாவில் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று காலை இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் மழை பொழிந்தனர். மேலும், இஸ்ரேல் நகருக்குள் புகுந்து கண்ணில் பட்ட மக்களை எல்லாம் சுட்டுக்கொன்று ருத்ர தாண்டவமாடினர். மேலும், இஸ்ரேல் இராணுவத்தினர் பலரையும், அப்பாவி பொதுமக்களையும் பணையக் கைதிகளாகச் சிறைப்பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானதாகவும், 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஹமாஸ் தீவிரவாதிகள் ஒரு கொடூரமான மற்றும் தீய போரை ஆரம்பித்து, அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கொன்றிருக்கிறார்கள். இப்போரில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதேசமயம், எங்களது எதிரி யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்கான விலையைக் கொடுக்க நேரிடும்” என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல் மூலம் காஸா நகரம் முழுவதும் மரண ஓலங்களை கேட்க வைத்திருக்கிறது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் இராணுவம், கடும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டது. இத்தாக்குதலின் விளைவை உணர்ந்த காஸா பகுதி மக்கள், குறிப்பாக இஸ்ரேல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறு இஸ்ரேல் எல்லைப் பகுதியிலிருந்து காஸாவாசிகள் வெளியேறிக் கொண்டிருக்க, இஸ்ரேல் படைகள் தெற்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்துீ இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “தெற்கை நோக்கி இஸ்ரேல் வீரர்கள் விரைந்துள்ளனர். காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்கெங்கு இருக்கின்றனர் என்பதை அறிந்து முன்னேறுகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.
இவர் இவ்வாறு தெரிவித்த சில மணி நேரங்களில் காஸா நகரம் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழைகளை பொழிந்தது. இதனால், எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், மருத்துவப் பணியாளர்கள் பலரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. காஸா நகரம் முழுவதிலும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இத்தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 1,600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.