கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த 50 கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஊட்டிக்கு பேருந்து மூலம் சுற்றுலா சென்றுள்ளனர்.
அந்த பேருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் தூரிப்பாலம் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் திடீரென தீ பற்றியுள்ளது. இதனைப் பேருந்திற்குப் பின்னே வந்த, வாகனத்தில் வந்தவர்கள் கவனித்துவிட்டனர். இதனையடுத்து, சுற்றுலா பேருந்து ஓட்டுநருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். ஆனாலும், பேருந்து உள் பகுதியிலும் தீ மளமளவெனப் பற்றி எரியத் தொடங்கியது.
இது குறித்து, தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வெகு நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால், அதற்குள் பேருந்தின் பெரும்பாலான பகுதிகளில் தீயில் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல் வாய்ப்பாக, சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.