இஸ்ரேல் – காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 3 நாட்களாக நடந்துவரும் போரில், 700 இஸ்ரேலியர்கள், 800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸா தன்னாட்சி நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியது. இதனால், இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹமாஸ் தீவிரவாதிகள் வான் வழியாகவும், கடல் மார்க்கமாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இஸ்ரேல் ரொம்பவே தடுமாறிப் போனது.
இதன் பிறகு, சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், காஸா நகரத்தின் மீது வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது. குறிப்பாக, ஹமாஸ் தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் மற்றும் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஹமாஸ் தீவிரவாதத் தலைவர் ஒருவரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. தொடர்ந்து, இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரின் மதிப்பை ஹமாஸ் தீவிரவாதிகள் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். காஸாவுக்கு எங்களது பலத்தைக் காட்டுவோம்” என்று கூறியிருந்தார்.
இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி இருப்பதாகவும், 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல, இஸ்ரேல் இராணுவத்தினர் பலரையும், அப்பாவி மக்கள் பலரையும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிணைக் கைதிகள் பலரையும், இஸ்ரேல் இராணுவம் மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, இஸ்ரேல் தரப்பில் காஸா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோன் டெர்மர் கூறியிருக்கிறார். மேலும், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அத்தீவிரவாதத் தலைவர்களின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் தகர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், மூத்த இராணுவ மற்றும் புலனாய்வு ஆய்வாளர் யோனா ஜெரமி பாப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேல் இராணுவம் 1,140 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 800 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காஸா வழித்தடத்திலுள்ள இஸ்ரேல் கிராமங்களில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் 6 சண்டைகள் நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இன்றும் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.