தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கும் போடி மெட்டு-மூணாறு சாலையை வரும் 12-ம் தேதி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்கிறார்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு என 3 சாலைகள் வழியாகச் சென்று வருகின்றனர். இவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மூணாறு மலைச்சாலை விளங்குகிறது. இந்த சாலை அதிக வளைவுகளைக் கொண்ட ஆபத்தான சாலையாகும். எனவே, போடி மெட்டு-மூணாறு தேசிய நெடுஞ்சாலையை 381.76 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது.
இப்பணிகள் கடந்த ஜூலை மாதமே நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் நிதின் கட்கரியால் வர இயலவில்லை. எனவே, சாலை திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், அதிகாரப்பூர்வமாக சாலை திறப்பு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வரும் அக்டோபர் 12-ம் தேதி நிதின் கட்கரி மூணாறு-போடி மெட்டு சாலையை திறந்து வைக்கிறார்.
அதேபோல 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள செருதோணி பாலத்தையும், அடிமாலி-குமுளி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகளையும் நிதின் கட்கரி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.