ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான திக் விஜய் சிங் வரும் 20-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 8-ம் தேதி மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான திக் விஜய் சிங், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். அதாவது, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பட்டியல் இன மக்கள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம்களுக்குச் சம உரிமை வழங்கப்படுவதைவிட பிரிட்டிஷ் ஆட்சியில் வாழ விரும்புவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் தெரிவித்திருந்தார் எனப் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக மற்றும் ஹிந்து அமைப்புத் தலைவர்கள் பலரும் திக் விஜய் சிங்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, திக் விஜய் சிங்கிற்கு எதிராக, மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தொண்டர் விவேக் சம்பானெர்கர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், வரும் 20 -ம் தேதி நேரில், ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள துகோகஞ்ச் காவல் நிலையத்தில் திக் விஜய் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.