ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியாவின் மிகநெருங்கிய கூட்டாளியாக விளங்குவது தான்சானியாதான் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மேலும், அந்நாட்டுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பை ஏற்று, தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் நேற்று இந்தியாவுக்கு வந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி வரவேற்றார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவைப் பாராட்டிய தான்சானிய அதிபர் சாமியா சுலுஹு ஹாசன், தனது வருகை இந்தியா மற்றும் தான்சானியாவின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் புதிய வழிகளைத் திறக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து, இன்று காலை ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்தவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ராஜ்காட்டில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் மோடியும், தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசனும் கலந்து கொண்டனர். அப்போது, இந்திய கடற்படை மற்றும் தான்சானியா கப்பல் ஏஜென்ஸிக்கு இடையேயான தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் பரிமாற்றம் உட்பட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டன.
2023 முதல் 2027 வரையிலான ஆண்டுகளுக்கான இந்தியா மற்றும் தான்சானியா இடையே கலாச்சார பரிமாற்றத் திட்டம், தான்சானியா தேசிய விளையாட்டு கவுன்சில் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் இடையே விளையாட்டு துறையில் ஒத்துழைப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம், மேலும், தான்சானியாவில் ஒரு தொழில் பூங்கா அமைப்பதற்காக இந்தியாவின் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் தான்சானியா ஐக்கிய குடியரசின் தான்சானியா முதலீட்டு மையம் ஆகியவற்றுக்கு இடையேயான பரிமாற்ற ஒப்பந்தம், கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் மரைன் சர்வீசஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் இடையே கடல்சார் தொழிலில் ஒத்துழைப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் ஆகியவை நடைபெற்றன.
இந்த பரிமாற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவிற்கும் தான்சானியாவிற்கும் இடையிலான உறவுகளில் இன்று ஒரு வரலாற்று நாள். இன்று நாம் நமது பழமையான நட்பை ஒரு மூலோபாய கூட்டாண்மைக்கு முயற்சிக்கிறோம். உள்ளூர் கரன்சிகளில் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளிலேயே தான்சானியா தான் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நெருங்கிய கூட்டாளி. தான்சானியாவின் திறன் மேம்பாட்டுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்திருக்கிறது.
மேலும், நீர் வழங்கல், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கியமான துறைகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தான்சானியா மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர முயற்சித்துள்ளோம். இராணுவப் பயிற்சி, கடல்சார் ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, பாதுகாப்புத் தொழில் போன்ற துறைகளில் இந்தியாவும் தான்சானியாவும் 5 ஆண்டுகால ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய பரிமாணங்கள் சேர்க்கப்படும். ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவால் தொடங்கப்பட்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் சேர தான்சானியா முடிவு செய்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகக் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதில் இந்தியாவும் தான்சானியாவும் ஒருமனதாக உள்ளன. இது தொடர்பாக, பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். எங்கள் உறவுகளை பிணைக்கும் மிக முக்கியமான விஷயம், நமது வலுவான மற்றும் பழமையான மக்கள் மற்றும் மக்களின் உறவுகள்தான். சான்சிபாரில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் மையத்தைத் திறப்பது எங்கள் உறவுக்கு ஒரு முக்கியமான மைல்கல்” என்றார்.