கடந்த 2006 -ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது.
இந்த குவாரியில் அளவுக்கு அதிகமாக, அதாவது 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். இதில், 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், அரசுக்குப் பாதகமாகப் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 5 பேர் மட்டும் ஆஜராகினர். ஆனால், அமைச்சர் பொன்முடி, எம்.பி., கௌதம சிகாமணி ஆகிய 2 பேரும் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக தங்களை அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அம்மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்க வேண்டினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.