நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்க இருந்த நிலையில், அக்டோபர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காங்கேசன் துறைமுகம் சேதமடைந்தது. இதை சீரமைக்க, இலங்கைக்கு இந்திய அரசு ரூபாய் 300 கோடி நிதியுதவி வழங்கியது. இதன் பின், புனரமைக்கப்பட்ட காங்கேசன் துறைமுகம் கடந்த ஜூனில் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியா – இலங்கை இடையே வர்த்தக உறவை மேம்படுத்த நாகையிலிருந்து, காங்கேசன் துறைமுகத்திற்குச் சிறிய பயணியர் கப்பல்களை இயக்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்காக இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறிய கப்பல் வாங்கப்பட்டது. இது குளிர்சாதன வசதியுடன் கூடிய, 150 பயணிகள் பயணிக்கும் வகையில் உள்ளது.
இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் செரியாபனி பயணிகள் கப்பல் நாகை துறைமுகத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 8-ஆம் தேதி நாகையிலிருந்து இலங்கையின் காங்கேசன் துறை முகத்திற்குச் சோதனை ஓட்டமாகச் செரியாபனி பயணிகள் கப்பல் சென்றது. இதில், 14 துறைமுக அதிகாரிகள் சென்றனர். இதேபோல, அக்டோபர் 9-ஆம் தேதியும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பின்னர், நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறை முகத்திற்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்றிலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கைக்குச் சுற்றுலா செல்ல 30 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை, நிர்வாக நடைமுறை காரணங்களால், 12-ஆம் தேதி காலை பயணியர் கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.