திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக, திருநெல்வேலி – திருச்செந்துார் இடையே 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலையின் இடது புறத்தில் 8 முதல் 10 அடி அகலத்தில் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக உள்ள, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர். குறிப்பாக, தைப்பூசம் போன்ற விழா நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநெல்வேலி வழியாகத் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கம். தைப்பூசம் போன்ற விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக, சாலைகளில் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், பெரிய அளவில் காயங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்க்க திருநெல்வேலி – திருச்செந்தூர் வரை 55 கிலோமீட்டருக்கு, சாலையின் இடது புறத்தில் 8 முதல் 10 அடி அகலத்தில் விரிவுபடுத்தும் பணி நடக்கிறது.
பக்தர்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக, கற்கள் மூலம் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் வாயிலாக இந்த சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல், மதுரையிலிருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்குப் பாதயாத்திரைக்குச் சிறப்பு சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது, ஏற்கனவே மதுரை – தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை விரிவாக்கத்துக்குத் திட்டம் உள்ளது. அதில் இத்தகைய சிறப்பு சாலைகள் அமைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.