திமுக ஆட்சி என்றாலே, விஞ்ஞான மோசடிகள் அரங்கேறும். அந்த வகையில், தற்போது ஆவினில் புதிய விஞ்ஞான மோசடி நடைபெற்றுள்ளதைக் கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது, சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் வடசென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
யாரும் எதிர்பாராத நேரத்தில், அதாவது, திருவிழாக்கள் முக்கிய நாட்களில், மக்கள் மிகுந்த பரபரப்புடன் உள்ள போது எடை குறைந்த பாலை விநியோகம் செய்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என புதிய விஞ்ஞான மோசடியை அரங்கேற்றியுள்ளது ஆவின் நிர்வாகம்.
அப்படித்தான், திங்கட்கிழமையான 9 -ம் தேதி, வடசென்னை பகுதிகளில் விநியோகம் செய்த ஊதா நிற ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகள் 100 கிராம் எடை குறைவாக, அதாவது 415 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதனால், பொது மக்கள் கொதித்தெழுந்து பால் முகவர்களிடம் எடை குறைந்த பாலை ஏன் வழங்கினீர்கள் எனக் காய்ச்சி எடுத்துவிட்டனர்.
இந்த சம்பவம் நடந்து முடிந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு அதிர்ச்சி. 10 -ம் தேதியான இன்று அதிகாலை மத்தியச் சென்னை பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் 135 கிராம் எடை குறைவாக இருந்துள்ளது. அதாவது, 385 கிராம் பால் பாக்கெட்டுகள் மட்டுமே வந்துள்ளது. இந்த விவகாரம் பால் முகவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நாள் 100 கிராம், இரண்டாவது நாள் 135 கிராம் எனத் தொடர்ந்து பால் பண்ணையிலிருந்து எடையளவு குறைவாக பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எடையளவு குறைவான பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்தால் யார் கண்டு பிடிக்கப்போகிறார்கள்? என்ற தைரியத்தில் ஆவினில் தொடர் மோசடிகள் நடைபெற்று வருகிறது.
ஏழை, எளிய மக்கள் வாங்கும் ஆவின் பாலில் இப்படி நித்தமும் அரங்கேறும் விஞ்ஞான ஊழலுக்கு முதல்வர் பொறுப்பேற்பாரா? எனக் கேள்வி கேட்கின்றனர் பொது மக்கள். பதில் சொல்வாரா முதல்வர் ஸ்டாலின்?