காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் மீது, இஸ்ரேல் விமானப்படை தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 900 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு, முப்படைகள் மூலம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது, காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. மேலும், காசாவிற்கு செல்லும் குடிநீர் சப்ளை உணவு மற்றும் மின்சாரத்தை நிறுத்துவதாக இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, இஸ்ரேல் நடத்தி வரும் வான்படை தாக்குதல் மூலம் காசா மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் படை நிர்மூலமாகி வருகிறது. காசா பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடை 130 இடங்களில் இஸ்ரேல் தனது அதிரடி தாக்குதலை நடத்தியது. குறிப்பாக, நேற்று இரவில் மட்டும் காசாவில் உள்ள 200 நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது.
இதில், சுமார் 1.80 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 1.37 லட்சம் பேர் ஐ.நா. நடத்தும் 83 பள்ளி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் காசாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் தாங்கள் பிடித்து வைத்துள்ள பணைய கைதிகளை ஒவ்வொருவராகக் கொள்வோம் என ஹமாஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் இந்த போரைத் தொடங்கவில்லை. மிகவும் கொடூரமான முறையில் இது திணிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இந்த போரை முடித்து வைக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு 48மணி நேரத்திலேயே 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் ஒருங்கிணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இஸ்ரேல் தொடர்ந்த தாக்குதலை அடுத்து பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் தற்போது கூறி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது