உலகத்திலிருந்து மத அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டிய தருணம் இது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரேலியர்கள் விரதம் இருக்கும் நாளில் சதி செய்து ஹமாஸ் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திப் பல நூறு பேரைக் கொன்றனர்.
மேலும், பல வெளிநாட்டினரைக் கொடூரமாகத் தாக்கி துப்பாக்கி முனையில் கடத்தி, சிலரைக் கொன்ற விடீயோக்கள் சமூக ஊடகங்களில் வரலானது. இது உலக மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈவிரக்கமற்ற மனித மிருகங்களாக நடந்துகொண்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போன்றவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து உலக அளவில் எழுந்துள்ளது. பொறுப்புணர்ச்சியைத் தூண்டி மனிதர்களை வேட்டையாடும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் நாகரிக உலகிற்கு அச்சுறுத்தல் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் இருபுறமும் மத அடிப்படைவாத பயங்கரவாத குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு உறுதுணையாகப் பாரதம் இருக்கும் எனக் கூறியுள்ளார். அதேபோல் அமெரிக்கா, பிரிட்டன், உக்கரையன் என உலகின் பல நாடுகளும் இஸ்ரேலுக்குத் துணை நின்று பயங்கரவாதிகளை முறியடிக்க ஆதரவு தெரிவித்து உள்ளன.
எனவே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டிய தருணம் இது என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த மதபோதகர் காலித் மெஹ்மூத் அப்பாசி என்பவன் “ஹமாஸ் இஸ்ரேலுக்கு என்ன செய்ததோ, அதை நாங்கள் காஷ்மீருக்குச் செய்வோம்” என்று கூறியுள்ளான் அதே சமயம் இந்தியாவில் சில இஸ்லாமியர்கள் இஸ்ரேல் தேசத்திற்கு எதிராகக் கருத்திடுகின்றனர்.
இஸ்ரேலை எதிர்ப்பதாகக் கூறி ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரித்தும், பயங்கரத்தை எதிர்க்கும் பாரத அரசிற்கு அச்சுறுத்தல் விடுத்தும் வருகின்றன. இவர்களின் உள்நோக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு இந்தியாவில் ஆள் சேர்ப்பது என்பது தெரியவந்துள்ளது.
எனவே, மத்திய மாநில உளவு நிறுவனங்கள் இவர்களைத் தீவிர கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.. இஸ்ரேல் உடன் உலக நாடுகள் இணைந்து ஒட்டுமொத்த இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிப்பதற்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.