தசரா திருவிழாவிவை முன்னிட்டு, மைசூரு அரண்மனையில் அபிமன்யு யானைக்கு மரத்தாலான அம்பாரி சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா வரும் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர்.
தசராவில் ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக பல்வேறு முகாம்களில் இருந்து, 14 யானைகள், மைசூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அந்த யானைகளுக்குக் கடந்த மூன்று வாரங்களாக நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியைச் சுமக்கும் அபிமன்யு யானைக்கு, சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜம்பு சவாரிக்கு சில நாட்களுக்கு முன், மர அம்பாரி வைத்து, ஒத்திகை பார்ப்பது வழக்கம். அதன்படி இந்த முறையும் ஒத்திகை தொடங்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழைக்கு நடுவில், நேற்று மாலை முறைப்படி பூஜைகள் செய்து, அபிமன்யு முதுகில் வனத்துறை அதிகாரிகள், மர அம்பாரியைக் கட்டினர். கொட்டும் மழையிலும் மர அம்பாரியைச் சுமந்தபடி, அபிமன்யு சுறுசுறுப்பாக நடந்தது. அதே போன்று, மகேந்திரா, தனஞ்செயாவுக்கும் மர அம்பாரி சுமக்கும் ஒத்திகை நடந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ஒரு மணி நேரம் மர அம்பாரி ஒத்திகை நடந்தது. தசராவுக்கு வந்துள்ள நான்கு யானைகளும் மிக சிறப்பாகச் செயல்படுகின்றன. மென்மையாக நடந்து கொள்கின்றன. அம்பாரி சுமக்க, அபிமன்யு முழு தகுதியும் பெற்றுள்ளது’ என்று தெரிவித்தார்.