கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக மினி லாரியில் கர்நாடக மாநிலத்திற்குக் கடத்திய 6 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி லாரிகளில் தினமும் கடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஒரு லாரியில் 6 டன் நியாயவிலைக்கடை அரிசி கடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் நியாயவிலைக்கடை அரிசி கடத்தலைத் தடுக்க தீவிர வாகன சோதனைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், கிருஷ்ணகிரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் தீபிகா தலைமையில் போலீசார் கிருஷ்ணகிரி சென்னை சாலையில் சுபேதார் மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கர்நாடகா பதிவு எண் கொண்ட மினி லாரி ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் அதனைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, 40 கிலோ எடை கொண்ட 152 மூட்டைகளில் 6 டன் 80 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.
இதனையடுத்து, ரேஷன் அரிசி கடத்திய லாரி ஓட்டுநர் காளிதாஸ் என்பவரை கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளரான வாணியம்பாடிச் சேர்ந்த சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக கைது செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலானவர்கள் அதிகாரிகளுக்குப் பணத்தைக் கொடுத்துத் தப்பி வருகின்றனர்.
எனவே, இதனைத் நிரந்தரமாக தடுக்கும் வகையில், தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.