தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி முதல், பாஜக ஆட்சி அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத்தில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு, பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷா,
பிரதமர் மோடியின் திறமையான ஆட்சி விரைவில் தெலங்கானாவில் அமையும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி முதல் இங்கு பாஜகவின் ஆட்சிக்கொடி பறக்கும். தெலங்கானாவில் பழங்குடி இனத்தவருக்காக அமையும் கிரிஜன பல்கலைக்கழகம் தாமதம் ஆனதற்கு முதல்வர் சந்திரசேகர ராவ்தான் காரணம். தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஏழைகளின் பிரச்சினைகள் தீரவில்லை. விவசாயிகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் பிரச்சினைகளும் கண்டுகொள்ளப்படவில்லை.
ஏழை குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மானிய விலையில் பிரதமர் மோடி காஸ் சிலிண்டர் வழங்கி வருகிறார். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது. அயோத்தி பிரச்சினை தீர்வுக்குப் பிறகு அங்கு ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது.
தெலங்கானாதான் நாட்டின் முதன்மை மாநிலம் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் பெருமை பேசுகிறார். ஆனால் இங்கு விவசாயிகளின் தற்கொலையை அவரால் தடுக்க முடியவில்லை. ஒவைசி கட்சியுடன் அவர் ரகசிய கூட்டணி வைத்துள்ளார். தேர்தல்வந்துவிட்டால் காங்கிரஸ்காரர்களுக்கு திடீர் பாசம் வந்து விடும். அதனை நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.