சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஓக்கலா சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஓக்லா சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அமானதுல்லா கான்.
இவர் டெல்லியில் வஃக்பு வாரியத்தின் தலைவராக இருந்த போது, சட்ட விதிமுறைகளை மீறி 32 பேரைப் பணி நியமனம் செய்ததாகப் புகார் எழுந்தது. மேலும், புதுடெல்லி அரசின் உதவித் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, 2022-ம் ஆண்டு, அமானதுல்லா கானை கைது செய்தனர். இதனிடையே, நீதிமன்ற ஜாமினில் அமானதுல்லா கான் வெளியே வந்தார்.
இந்த நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமானதுல்லா கான் வீடு, அலுவலகம் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மூவர் வீடுகளிலிருந்து முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில், அமானதுல்லா கான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது