உலக நாடுகளை மிஞ்சும் வகையில் இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் புரோவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் இன்று தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கிவைத்தார்.
கூட்டதில் பேசிய எல் முருகன், சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் இந்தாண்டு சிறுதானிய உணவு ஆண்டாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில் பல்வேறு மத்திய அரசு நலத்திட்டங்கள், சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை மாணவர்கள் பின்பற்றி பயன் பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரதமரின் செயல்பாடுகள் காரணமாக உலக நாடுகளை மிஞ்சும் அளவிற்கு நமது நாடு வலிமை மிக்க நாடாகவும் சுயசார்பு கொண்ட நாடாகவும் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மகளிருக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் அறிவித்துள்ளதாகக் கூறிய அவர், இது நாட்டில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக அமையும் என்று தெரிவித்தார். புத்தொழில் நிறுவனங்கள் ஒரு லட்சத்திற்கும் மேலாக உருவாகியுள்ளது என்றும் இவை அனைத்தும், 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களால் நடத்தப்படுவது என்று கூறினார்.
வேலைக்காக காத்திருந்த காலம் மறைந்து இப்போது பிறருக்கு வேலை அளிப்பவர்களாக நமது நாட்டு இளைஞர்கள் மாறியிருக்கிறார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறையில் கூட நமது நாட்டில் தயாரிக்கும் பொருள்களை நாம் பயன்படுத்துவதோடு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகள் குறித்த புத்தகத்தை அமைச்சர் திரு எல் முருகன் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்களை அவர் வழங்கினார். இந்நிகழ்வின் போது, பழங்குடியின மக்கள் அமைச்சரை கௌரவித்தனர்.