காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாண்டியா, மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர், ராம்நகர் போன்ற காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்குத் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது.
பெங்களூரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இடையிடையே, பெய்து வரும் கனமழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
பெங்களூரு நகரின் எச்.பி.ஆர்., லே அவுட்டின் கரியம்மன அக்ரஹாராவில் மழைநீர் கால்வாய் நிரம்பி, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனங்களில் வந்த பலர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கயிறு மூலம் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
நகரில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. பனசங்கரி முக்கிய சாலையில், பெரிய மரம் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நகரின் சில இடங்களில், சாக்கடை கால்வாய் நிரம்பி, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் சென்றது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.