ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை மற்றும் நிறை புத்தரிசி பூஜை, வருடப் பிறப்பு போன்றவற்றிற்குத் திறக்கப்படுவது வழக்கம். மேலும், ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை, ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபம் ஏற்றி வைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடைபெறும்.
செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோவிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக இணைய முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் அக்டோபர் 17-ஆம் தேதி முதல் செயல்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஐயப்பன் கோவிலுக்கு கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.