காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில், அங்கு வசிக்கும் 10 லட்சம் மக்களும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கெடு விதித்திருந்த நிலையில், 4.50 பேர் வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
காஸா தன்னாட்சி நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது அறிவிக்கப்படாத தாக்குதலை நடத்தினர். காலையில் சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணை வீசி இஸ்ரேலை திக்குமுக்காட வைத்தனர். இத்தாக்குதால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், காஸா மீது போரை அறிவித்தது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருந்தார்.
இதையடுத்து, காஸா நகரின் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல், குண்டு மழை பொழிந்தது. இதில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைமையகம், தீவிரவாதத் தலைவரின் வீடு, மசூதியின் மையப்பகுதியில் இருந்து தீவிரவாத முகாம் உட்பட பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும், 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், நூற்றுக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும், காஸா நகரத்தில் வசிக்கும் 10 லட்சம் மக்களும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேறி, ஐ.நா. அமைத்திருக்கும் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைய வேண்டும் என்று கெடு விதித்திருந்தது.
மேலும், காஸாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் விமானப்படையினர் வானில் இருந்து நோட்டீஸ்களையும் வீசி எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காஸா நகர மக்கள் சாரை சாரையாக வெளியேறத் தொடங்கினர். இதுவரை சுமார் 4.50 லட்சம் பேர் வெளியேறி இருக்கின்றனர். இவர்களில் 3 லட்சம் பேர் ஐ.நா. பாதுகாப்பு முகாம்களிலும், 50,000 பேர் பாலஸ்தீன அரசின் நிவாரண முகாம்களிலும், மற்றவர்கள் காஸா நகரின் தெற்கு பகுதியில் மைதானங்களிலும், பொது கட்டடங்களிலும் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இதற்கிடையே, பல்வேறு நாடுகளில் இருக்கும் இஸ்ரேல் விமானப் படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று இஸ்ரேல் அழைப்பு விடுத்திருக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது. 7-வது நாளான இன்று தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் என இதுவரை 752 கட்டடங்கள் தரைமட்டமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1948-க்குப் பிறகு இதுவே மிக மோசமாக தாக்குதல் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.