ஆவின் இனிப்புகளை மூடி இல்லாத பாக்கெட்டில் அடைத்து, விற்பனை செய்வதால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவினில் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு எல்லா இனிப்பு வகைகளையும், நெகிழி பெட்டியில் வைத்து, காற்று புகாத வகையில் மெல்லிய பாலிதீனால் இறுக மூடி ஆவின் விற்பனை செய்து வருகிறது.
இந்த இனிப்பு வகைகள் 250 கிராம் மற்றும் 500 கிராம் எடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நெகிழி பெட்டியைத் திறந்து விட்டால், மீண்டும் மூடி வைக்க இயலாது. இதனால், இனிப்புகளை ஈக்கள் மற்றும் சிறிய பூச்சிகள் உண்ணுவதால், இதனை மீண்டும் உண்ணும் மனிதர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இனிப்புகளில் காற்று புகுவதால், இனிப்புகள் சீக்கிராமாகக் கெட்டு விடுகின்றன.
குஜராத் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான அமுல் மூலம், பலவகை இனிப்புகள் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அவை காற்று புகாத நைட்ரஜன் பேக்கிங் செய்யப்பட்டிருந்தாலும், அதன்மேல் மூடி போடப்பட்டு இருக்கும். இதனால், இனிப்புகளைத் திறந்த பிறகு மூடிவைத்து பயன்படுத்த முடியும். ஆனால், ஆவின் இனிப்புகளுக்கு மூடி வழங்காதது நுகர்வோர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவினில், விற்பனை செய்யப்படும் பால்கோவா, திறந்து மூடும் வகையில், மூடி உள்ளது. அதைவிடக் கூடுதல் விலையில் விற்கப்படும் பண்டிகை கால இனிப்புகள், மூடி இல்லாமல் இருப்பதால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.