ஜி20 நாடாளுமன்றத் தலைவர்களின் உச்சி மாநாட்டை (பி20) தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மனித நேயத்திற்கும், பூமிக்கும் தீவரவாதம் மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது என்பது உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.
தேசியத் தலைநகர் டெல்லியிலுள்ள யஷோபூமியில், ஜி20 நாடாளுமன்றத் தலைவர்களின் 9-வது உச்சி மாநாடு (பி20) தொடக்க விழா இன்று நடந்தது. இம்மாநாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசுகையில், “இந்த உச்சி மாநாடு ஒரு மஹாகும்பமாகும். ஏனெனில், இது உலகின் நாடாளுமன்ற நடைமுறைகளின் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கிறது. இந்தியா நிலவில் தரையிறங்கியது. ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இன்று நாங்கள் பி20 உச்சி மாநாட்டை நடத்துகிறோம்.
இந்த உச்சி மாநாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் (இந்தியா) மக்கள் சக்தியைக் கொண்டாடுவதற்கான ஒரு தளமாகும். 9-வது பி20 உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதை நாங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம். பி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் ஜனநாயகத்தின் தாயான உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்கள் அல்லது சட்டமன்ற அமைப்புகள் ஆலோசனைகள் மற்றும் விவாதங்களை நடத்துவதற்கான முக்கிய இடங்கள்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் 32 லட்சம் பேர் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 50 சதவீதம் பேர் பெண்கள். அனைத்து துறைகளிலும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். மோதல்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது. பிளவுபட்ட உலகம், நம் முன்னால் இருக்கும் சவால்களுக்கு தீர்வைக் கொடுக்காது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம். ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம். அனைவரின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக உழைக்க இதுவே நேரம்.
பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர். பூமிக்கும், மனித நேயத்திற்கும் தீவிரவாதம் எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராக எவ்வாறு ஒருங்கிணைந்து போராடுவது என்பது குறித்து உலகில் உள்ள நாடாளுமன்றங்களும், உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நோக்கில் உலகத்தை பார்க்க வேண்டும்” என்றார்.
இம்மாநாட்டில், இந்தோனேசியா, மெக்சிகோ, சவூதி அரேபியா, ஓமன், ஸ்பெயின், ஐரோப்பிய நாடாளுமன்றம், இத்தாலி, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, துருக்கியே, நைஜீரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம், இந்த உச்சி மாநாட்டில் (பி20) கனடா கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
இந்த உச்சி மாநாடு 2 தனித்தனி அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் அமர்வில், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்கிற தலைப்பிலான விவாதம், 2030 நிகழ்ச்சி நிரலுடன் நிலையான வளர்ச்சி இலக்குகள், சாதனைகளை வெளிப்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2-வது அமர்வு ‘ஒரே பூமி நிலையான ஆற்றல் மாற்றம் – பசுமை எதிர்காலத்திற்கான நுழைவாயில்’ என்கிற தலைப்பில் நடைபெறுகிறது.