ஆப்கானிஸ்தானின் காபூல் அருகே, 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், பிலிப்பைன்ஸ் தலைநகரில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியான ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் ஜிண்டா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. இதனால், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதாகவும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், 1,320 வீடுகள் சேதமடைந்து உள்ளதாகவும் அந்நாட்டின் அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காபூல் நகருக்கு அருகே, இன்று ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் அச்சடைந்துள்ளனர்.
இதேபோல், பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.